Sunday, August 28, 2011

தமிழர்களது காணிகளை இந்தியா பாதுகாத்து தர வேண்டும் - ததேகூ கோரிக்கை


தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமிக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற இரண்டு நாள் கலந்துரையாடல்களின் போது இந்திய அரசிடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக அக்கட்சியின நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இலங்கை தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தும் பொருட்டு இந்த சந்திப்பிற்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. 

இலங்கையின் 8 தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர். 

இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி மக்களை அவர்களது சொந்தக் காணியில் குடியமர்த்துவதற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என  தாம் கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இராணுவத் தலையீடு நிறுத்தப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிவில் நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் நிலப் பகுதிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுதல் மற்றும் யுத்த காலத்திலும் அதற்கு முன்பாகவும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல் என்பன பற்றியும் இந்தியாவிற்கு அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள 2 லட்சம் இலங்கை தமிழ் மக்களை நாட்டிற்கு மீள திரும்புவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இலங்கையை இந்தியா வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  சுரேஷ் பிரேம சந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment