இலங்கை எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் ஆயிரத்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்துக் கொள்வதை இலக்காக கொண்டுள்ளது.
இதற்காக ஐந்து இலட்சம் ஏக்கர் காணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கவுள்ளதாக பொருளியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த காணிகளில் தொல்லியல் பெறுமானம் கொண்ட 18 இடங்களும், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை உள்ளடக்கிய 30 இடங்களும், வன விலங்கு சரணாலயங்கள், காடுகள், ஈர வலயங்கள், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளடங்களாக 124 இடங்களும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நோக்கததிற்காக கரையோரங்களை அண்டிய இரண்டு இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பும்,
விவசாயச் செயற்பாடுகள், விளையாட்டு மைதானங்கள், மற்றும் பொழுதுபோக்கு மையங்களை நிறுவுவதற்காக மூன்று இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பும்; வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசால் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் காலிமுகத்திடல் பிரதேசம் உள்ளடங்கலாக 20 ஏக்கர் நிலப் பிரதேசத்தை சங்கிறீலா மற்றும் கதிக் சுவிக் நிறுவனங்களுக்கு ஏற்கனவே அரசு கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹம்பாந்தோட்டை, கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம், மாத்தறை, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, காலி போன்ற மாவட்டங்களில் உல்லாசப் பயணத்துறையுடன் தொடர்புடைய பிரதேசங்களை அண்டியுள்ள காணிகளையும் கையளிப்பதற்கும் அரசு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ரீதியிலும், சுற்றாடல் ரீதியிலும் மற்றும் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெறும் பெறுமதி மிக்க இலக்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏலமிடுவதானது நாட்டின் எதிர்கால நலனுக்கு பாரதூரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
No comments:
Post a Comment